உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 31 December 2014

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முன்பு பூத்த ஆண்டு(2014) உதிர்ந்தது!
இன்று புத்தாண்டு(2015)  மலர்ந்தது!!
இருள்நீக்கி விடியல் புலர்ந்தது!
இதயத்தில் மகிழ்ச்சி வளர்ந்தது!!

கிழித்து போட்ட நாள்காட்டியின்
தாள்களாய்
கீழ்மைக் குணங்கள் போகட்டும்!....
நல்ல எண்ணம்  விளையும்
தோட்டமாய்
மனித மனமது ஆகட்டும்!!

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை..
அனுதினம் உணர்த்தும்
ஆணியில் அறையப்பட்ட காலண்டர்....
வலிகள் கடந்து நல் வழியில் நடந்து
வாழ்வில் வசந்தம் பெறுவோம்!...
உறவுகளுக்கு
இதயம் வருடும் இனிய அனுபவத்தையே
இவ்வருடம்(2015)  தருவோம்!!...

Monday 20 October 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

அதிரடியாய் வெடிக்கும் பட்டாசு
அடுத்த நொடியில் சாம்பலாய் போகிறது!..
அமைதியாய் திகழும் அகல் விளக்கு
அடுத்த வீட்டுக்கும் ஒளியாய் ஆகிறது !!....
ஆணவமும் அகங்காரமும் நம்மை கெடுக்கும்!
அமைதியும் அன்பும் நல்வாழ்வை கொடுக்கும்!!
                                        -கவிஅன்பு

Wednesday 24 September 2014

சரித்திர வெற்றியில் சாதனை தமிழர்

இந்திய அறிவியலில் மிகப்பெரிய சாதனை நேற்றைய தினம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்ட மங்கள்யான் செவ்வாயை அடைந்த தினம் நேற்று . இன்றைக்கு உலகமே இந்தியாவின் சாதனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் மங்கள்யான் விண்கலம் .செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்' திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்! இவர் ஒரு தமிழர் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து(ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி )விஞ்ஞானி. 

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய அருணன் வகுத்த வியூகம் அளப்பறியது, செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட உடன் சக விஞ்ஞானிகள் அவருடன் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு... மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்  திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்..
 
 பெருமைமிகு தமிழன் என்ற முறையில் அவருக்கு நமது வாழ்த்துக்கள் 
                                                                     -கவிஅன்பு (25.9.14)

Tuesday 23 September 2014

காதல் வலி

அன்பே !...
உன்னை வெறுக்கும் அளவைவிட
என் இதயத்தை
அதிகம் வெறுக்கிறேன் நான்....
எனக்குள்ளே இருந்து கொண்டு
உனக்காக துடிக்கிறது பார் !......
                            - கவிஅன்பு

Friday 12 September 2014

காலை வணக்கம்

சூரிய கதிர்கள் தரும்
கதகதப்பான வெப்பத்துடனும்....
பாடும் பறவைகள் தரும்
பரவசமூட்டும் குரலோசையுடனும்....
மலரும் பூக்கள் தரும்
மனம்கவர் புன்னகையுடனும்....
வளர் மரங்கள் தரும்
இதமான தென்றலுடனும்....
பனித்துளியில் தோன்றும்
மென்மை ஸ்பரிசத்துடனும்...
அழகாய் படரட்டும்  காலை
மகிழ்ச்சி தொடரட்டும் இவ்வேளை...
                                - கவிஅன்பு







Sunday 31 August 2014

கற்பனை காதலியின் காலைநினைவு

கண்விழித்து பார்க்கும் காலை நேரம்
பறவைகளின் சப்தத்தின் ஊடே - என்னுள்
அழகாய் எட்டிப் பார்க்கும் அன்பு
காதலியுன் அழகிய நினைவுகள் .......

மௌனமாக உறக்கம் மயக்கம் தெளிந்து
கதிரவஒளியில் கலைந்து செல்லும் வேளையில்
மனக்கண்ணில் தெரியும் மங்கையும் நீதானடி
மயக்கும் காதலியே!...
எழிலான  உன் நினைவலை எழும்பும்
என் மனமும் ஒரு ஆழியே!!

சுடர்விடும் சூரிய ஒளி பூமியை
சுற்றி வரும் நேரத்தில் ! காதலிநீ
இருக்கிறாயடி என்  இதயத்தின் ஓரத்தில்!!
சந்தோஷ புன்னகை காட்டி....
உன் அன்பு கரங்களை நீட்டி....
ஆம் உனையே சுற்றிவரும் மனம்!
 உன்னினைவால் எனக்கு இன்று
நல்ல தினம்!!

மலர்கள் தன்னிதழை  விரித்து
மகிழ்ச்சியுடன் தலையாட்டும்- காதலி
உன் நினைவுகள் மட்டும்தானடி
எனக்குள் மகிழ்ச்சி ஊட்டும்.....

ரோஜா நீயாக இருந்தாலும்
பறிக்கப்படுவது என் மனம்தான் - ஆம்
அழகிய ரோஜாவாய் சிரிக்கிறாய்
அன்புகாட்டி இதயத்தை பறிக்கிறாய்.....

உன்பேச்சின்  இதமான மென்மை பனித்துளி...
உன்பேச்சின் இதமான உணர்வு தென்றல்.....
உன்னழகிய இதயத்தின் கதவுகள் சூரியஒளி...
உன்இன்முகம் நான்காணும் நாளது பௌர்ணமி.....

சுடும் பாலைவனத்தில் இருந்த எனக்கு
குளிரும் சோலைவனத்தில் இடம் கொடுத்தாய்...
இனிக்க இனிக்க பேசியென் மனதையும் எடுத்தாய்...
தென்றலுக்கு அடிப்படை மரம்!
காதலியுன் உறவுதானடி கடவுள்
எனக்களித்த வரம்!!
                           -கவிஅன்பு

மாசுபாடு




















"அழுக்கான எங்களை
குளிப்பாட்ட வாருங்கள் "
வான்மழை நோக்கி
நகரத்து மரங்கள்....
            - கவிஅன்பு.

Friday 29 August 2014

எறும்பின் கேள்வி














ஓ மனிதர்களே !
உயிர் காக்க உணவை தேடி
கூட்டமாய் அலைகிறோம் நாங்கள்...
உயிர் நீக்க நஞ்சை தேடி
கூட்டமாய் அலைவதேன் நீங்கள்?..
இப்படிக்கு எறும்புகள்...
--------------------------------
உணவை தேடும் எறும்பின் பயணம்!..
உயிர்கொல்லி தேடும் மனிதனின் பயணம்!!..
                     - கவிஅன்பு

மரம்















வானம் பார்த்த மரம் - அது
வளமையான பசுமையின் கரம்...
மனித வாழ்வுக்கு அதுவே நல் உரம்..
அதனால் உயரும் மாசற்ற
பூமியின் தரம் - அதை
வளர்ப்பதும் மிகசிறந்த அறம்....
மைந்தர்களை மட்டும் அல்ல
மரங்களையும் சேர்த்து வளர்ப்போம்..
மாசின்றி மண்ணினை காப்போம்......
                                      -கவிஅன்பு

தொடுவான எண்ணங்கள்
















சொல்லிவிடலாம் என்று உன்
அருகில் வரும்போதெல்லாம்
தயக்கத்தில்
தொடுவானமாய்  எனைவிட்டு
தூரமாய் செல்கிறதே
வார்த்தைகள்.......
              -கவிஅன்பு  

உதடுகள் உரசும் உன்னதநேரம்...
















வேண்டும் வேண்டும் என்று
மனம் சொல்லும்...
வேண்டாம் வேண்டாம் என்று
இதழ் சொல்லும் - உன்னை
இறுக்க அணைத்து  முத்தமிடும்
அந்த இனிய தருணங்கள்...
                       -கவிஅன்பு 

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


















கரி(யானை) முகம் கொண்ட கஜமுகனே - பூத
கணங்களுக்கு அதிபதியான கணபதியே...
வினைகள்தனை நீக்கும் விக்னேஸ்வரனே...
விதியின் கொடுமை போக்க நீயுமொரு அரணே...

ஏற்றம் பெறட்டும் எளியமக்கள் வாழ்வு
உனக்காய் ஏற்றப்பட்ட ஒளிரும் தீபம் போல....
துன்பஇருள் நீங்கி இன்பமது  வரட்டும்-நின்
இடது கையில் ஏந்திய இனிக்கும் லட்டு போல....

கல்லாமை நீங்கி கல்வியது வளரட்டும் - உன்
வலதுகை ஆயுதத்தின் வலிமையான கூர்மை போல....
வன்முறை மனம் நீக்கி அன்பு வாசமது பரவட்டும் -நின்
மறுகை தாங்கிய மாசற்ற மலர் போல...

துணையாய் வரும் தும்பிக்கையோனே!
மலரும் முன்னே மொட்டுகளில்
மதிமயங்கி தேன் தேடும்
மானம்கெட்ட மூடர்களை
மகிழ்ந்து நீயும் அழித்திடல் வேண்டும் !....
மதுவுக்கு அடிமையாகி குடும்ப
மகிழ்ச்சியதை தொலைக்கும்
மதிகெட்ட மனிதர்க்கு -நல்
அறிவை நீயும் அளித்திடல் வேண்டும் !!....

மனிதர்களை மட்டுமல்ல - இயற்கை
மரங்களையும் காத்துவிடு மகேசனே!...
இல்லையெனில் இன்று
உனக்கு அரச மரம் - நாளை
தெருவோர ஆண்டிமடம்.....
இருந்தாலும் நவில்கிறேன்  நன்றி உனக்கு
நான் வாழும் நகரத்தில் கூட வெட்டப்படாமல்
அங்கும் இங்குமாய் வாழும் அரசமரம்
அதீத ஆண்டவன் நம்பிக்கையால்..........

வேண்டியது எல்லாம் நடக்குமா தெரியாது..
எதிர்காலத்தை இம்மனித  மனமும் அறியாது...
உன்முகத்தில் இருப்பது தும்பிக்கை....
எனக்கு உன்மேல் சிறிது நம்பிக்கை...
கேட்டுவைத்தால் உன்னிடம் - மன
பாரம் குறையும் என்னிடம்...
அதனால் கேட்கிறேன் - வருங்காலத்தில்
நடக்குமா பார்க்கிறேன்...
                          - கவிஅன்பு 

Monday 25 August 2014

வாரியார் பிறந்தநாள்
















திருமுருக கிருபானந்த வாரியார்(ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்..
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்..

Thursday 14 August 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
















மீளாத நிலையில் மீனவர் பிரச்சினை...
கைவிடும் நிலையில் கச்சத்தீவு பிரச்சினை...
காலமெல்லாம் தொடரும் காவிரி பிரச்சினை..
முன்னேறி பதுங்கும் முல்லைபெரியார் பிரச்சினை..
இனத்தை அழித்த ஈழத்தமிழர் பிரச்சினை....
இருந்தாலும் நானுமொரு இந்திய(தமிழ)ன்....
சுவாசிக்க மூச்சுரிமை!போராட பேச்சுரிமை!!...
சும்மா வந்ததல்லவே சுதந்திரம்!!....
வாஞ்சி முதல் வஉசி வரை பெற்ற
துன்பத்தை யோசிப்போம்!..
இனமொழி  வேறுபாடு களைந்து
இந்தநாளை நேசிப்போம்!!....
அகன்றது அன்னியரின் தந்திரம்
அல்லல்பட்டு கிடைத்ததே சுதந்திரம்...
                                   -கவிஅன்பு

Sunday 3 August 2014

நண்பர்கள் தின நல்வாழ்த்து















நேரம்போக பேசி பிரியும்
நிமிட நட்பு வேண்டாம் !...
தூரம் இருந்தாலும் நெஞ்சம்
துடிக்கும் நட்பே வேண்டும் - மன
காயங்களை ஆறுதல் சொல்லி ஆற்றவும்...
துன்பவாழ்வில் உடனிருந்து கொஞ்சம் மாற்றவும்......
நல்லதோர் நட்பே நாளும் வேண்டும் ....

அன்பு செலுத்துவதில் அன்னையாய்
அக்கறை காட்டுவதில் தந்தையாய்
அதட்டி திருத்துவதில் ஆசிரியராய்
அழகானதோர் நட்பே அனுதினமும் வேண்டும்..

எழுத்து பிழைகள் நிறைந்த
என் வாழ்வெனும் ஏட்டை
எடுத்து சொல்லி திருத்தும்
எழிலான நட்பே என்றும்  வேண்டும்...
பிம்ப நிலவாய் பின் வருவதை விட
நிஜ விண்மீனாய் நிலைத்து வரும்
போலியற்ற  நட்பே புனிதமாய் வேண்டும்....

Monday 28 July 2014

நிலவு நீதானடி..
















நிலவில் மனிதர் வசிக்க
நித்தமும் ஆராய்ச்சியாம்....
உனக்குள் நான் இருப்பதை
உணராத அறிஞர்கள்!......
                     -கவிஅன்பு 

நினைவோடு பேசுகிறேன்..

















நிசப்தமான காற்றில்லாத
நிலவொளி படர்ந்த நீள்இரவு...
நிழலோடு பேசுகிறது மரம்!
காதலியுன் இனிய
நினைவோடு பேசுகிறது மனம்!..
                   -கவிஅன்பு .

அன்பே நீயன்றி...
















அழகிய ரோஜா
உன்னை சுமக்கும் செடியாக
இருக்க விரும்புகிறேன்!...
நீயெனை விட்டு நீங்கும்போது
இவ்வுயிரை விட்டு
இறக்க விரும்புகிறேன்!!...
                 - கவிஅன்பு 

புதுக்கவிதை (ஹைக்கூ )


நின்றது
மெழுகுவர்த்தியின்
கண்ணீர்.....
மின்சாரம்
    - கவிஅன்பு

Friday 25 July 2014

உறவு...















உணவில்லாமல் உயிரில்லை-நேச
உணர்வில்லாமல் உறவில்லை..
                               - கவிஅன்பு.

Saturday 19 July 2014

படித்ததில் பிடித்தது












டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

Wednesday 16 July 2014

கண்ணதாசனுக்கொரு கவிதை..














முத்தையாவெனும் இயற்பெயரில் - எழில்
முத்துபோல் உதித்தவனே !....
கவிதைகளாய் எழுதி தமிழன்னையின்
கிரீடத்தில் - நவ
ரத்தினத்தை பதித்தவனே!!

சிறுகூடற்பட்டியில் பிறந்தாய்!
இலக்கிய சிந்தனையில் சிறந்தாய்!!
கஷ்டங்களை மறந்தாய்-எழுதுகோலினால்
கவிதைகளை கறந்தாய்!!

மூன்று மனைவி பெற்றாலும் நீ
முத்தமிழின் காதலன்தான் -ஆம்
உணர்வுகளில் அணைத்தாய் - நின்
உயிரோடு அல்லவா செந்தமிழை இணைத்தாய் ...

அர்த்தமுள்ள இந்துமதத்துடன்
அழகாய் ஏசுகாவியம் கொடுத்தாய்!...
மதங்கள் பொருட்டல்ல என்று
மனதினில் எண்ண வைத்தாய்!! ...
திருநீறுடன் நெற்றியில் பொட்டு வைத்தாய்!
மனித உணர்வுகளை பாடலில்
தொட்டு வைத்தாய்!!

சிக்காகோவில் மறைந்த சிந்தனை செல்வனே!..
கருத்தாழம் பொதிந்த உன்பாடல்
எம்மனதில் ஒலிக்கும் என்றும் செவ்வனே!!...

எமக்கு முன்பே நீ மறைந்துவிட்டாய்!
தமிழெனும் வானத்தில் நிலைத்த சூரியனாய்
நின் கவிதைகளை வரைந்து விட்டாய்.!!..
நிறை குடம் அது வழியாது - ஆசுகவி
நின் படைப்புகள் என்றும் அழியாது.....
                     -கவிஅன்பு 

Monday 14 July 2014

தமிழை உச்சரிக்கும் முறை ('ழ' கரம்):-











உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று.

*பல்-பள்ளம்-பழம்*

ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)

'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)

'ழ்' என்னும் எழுத்துக்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்...

 தாய் மொழியை சரியாக உச்சரிப்போம்...
 தமிழ்பேசி விருந்தினரை உபசரிப்போம்....*
                                         --கவிஅன்பு

Sunday 29 June 2014

விடியல் தரும் காலை ...

பனித்துளியின் மீது பகலவன்
பார்வை படரும் நேரம்..........
அழகான பறவைகள் ஓசை எழுப்ப
அதிகாலை தொடரும் நேரம்............
சோம்பல் முறித்து காலை
சுகமாய் தெரிகிறது........
காணும் மனிதரில் எல்லாம் மெய்
அன்பே தெரிகிறது.......
அனைவருக்கும் விடியல் என்றுதான்
அதிகாலை இயம்புகிறதோ ?....
இருள் முடிந்து தொடங்கும் இனிய காலையாய்
வசந்தம் வரும் வாழ்க்கையிலும்.
வரவேற்க காத்திருப்போம் ..........