உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 August 2016

குழந்தை தொழிலாளர் கவிதை

மண்ணில் ஓடியாடி மழலையோடு
மனமகிழ விளையாடும் பருவத்தில்
மண்ணைக் கொத்தி பணிசெய்யும்
மாறுபட்ட நிலையினை பாரீர் !.....
மண்ணை மட்டுமல்ல சிறுவன்  நம்
மனதையும் கொத்தி செல்கிறான்.....

பள்ளிசென்று பாடம்கற்று-புத்தகமதை
கரங்களில் ஏந்தும் பருவத்தில்
கனமான செங்கற்களை கையிலேந்தும்
கடினமான நிலையினை பாரீர் !.....
செங்கற்களை மட்டுமல்ல அவன்-சீழ்பிடித்த
சமுதாய நிலையினையும் ஏந்தி செல்கிறான்...

மெலிந்த உடலுடன் - அருவியாய்
வழிந்த வியர்வை பரவ
மலராத மொட்டொன்று இங்கே
மரக்கட்டை சுமந்து திரியும்
மனம்நோகும்  நிலையினை பாரீர் !....
மரக்கட்டையை மட்டுமல்ல சிறுவன்-வறண்ட
குடும்ப வறுமையினையும் சுமந்து திரிகிறான்

தோளில் தகப்பன் தூக்கிவைத்து
துள்ளும் மகிழ்வுடன் திரியும் வயதில்
தோளே சுமைதாங்கியாய் மாறிவிட்ட
துயரமான நிலையினை பாரீர் !....
தோள்சுமையை மட்டுமல்ல சிறுவன்-தேசத்தின்
அவலத்தையும் சேர்த்தே சுமக்கிறான்......

குழந்தை வேலை செய்யும் இக்குற்றத்திற்கு
பெற்றோரும் ஒரு காரணம்
பெருஞ்செல்வந்தனும் ஒரு காரணம்
சமுதாயமும் ஒரு காரணம்..
சாக்கடை அரசியலும் ஒரு காரணம்...

முதலாளிகள் மாறுகையில் இக்குழந்தைகளின்
முகவரிகள் மாறுவது எப்போது?
அரசியல்வாதி மாறுகையில் இக்குழந்தைகளின்
அவலநிலை மாறுவது எப்போது?

"இனியொரு விதி செய்வோம்" என்றான் பாரதி ....
விதிகள் எங்கே செய்வது ?- சிறார் சட்டத்துக்கு
எதிரே சதிகள்தான் இங்கே செய்கின்றனர் ...
சிறு தளிர்கள் தளர்ந்து போகாமல் -ஒருநாள்
தளிர்த்து வளரும் நிலையது பெறும் !
அன்றுதான் இச்சிறுவர்
மனதில் மகிழ்ச்சி அலையது வரும் !!
                            - கவிஅன்பு

No comments: