உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 13 August 2015

சுதந்திர தின வாழ்த்துக்கள்

தாய்ப்பால் வற்றியது என்று
கஷ்டப்பட்டு
வாங்கிய புட்டிபாலில்
கலப்படம்.........
பாலினை போன்ற
வெண்மையினை - தேசிய
கொடியில் பார்க்கிறேன்...

தந்தையின் விவசாயம்
வானம் பார்த்த பூமி,
வறண்டு போன நீர்நிலை
வறட்சியின் பிடியில்
வளமின்றி போனது.....
பசுமை வண்ணம் பச்சையினை
பாரத கொடியில் பார்க்கிறேன்.....

உடுத்த உடையின்றி
வறுமையில்  வாழ்வு
ஆன்மிக ஆறுதல் தேடி
அன்னை தந்தை  வாங்கிய
காவி உடை கூட
கந்தலாகி போனது......
கசங்காத காவி வண்ணம்
கண்கவர் கொடியில் பார்க்கிறேன்......

வீட்டில்  இருந்த
மாட்டு வண்டியும்
காணாமல் போய்
வாகனம்  வாங்க கூட
வசதியில்லை....
பழுதின்றி  சுழலும் சக்கரத்தினை
பாரத கொடியில் பார்க்கிறேன்....

வறுமையால் மதுவினை
குடிக்கின்ற தந்தை
அடிக்கின்றார் அன்னையை...
அக்கம் பக்கம் பார்க்க
அவமானத்தில் தலைகுனிவு......
கர்வத்துடன் கொடி
நிமிர்ந்து பறப்பதை
கண்ணால் பார்க்கிறேன்...

குடும்பத்தை வறுமை
பிடித்து  வாட்டுகிறது!...
ஆனாலும் என்
கைகளோ தேசிய கொடி
பிடித்து ஆட்டுகிறது!!...

வறுமையோட சேர்ந்து
வீட்ட கெடுக்குது குடி!..
கையில  பட்டொளி வீசி
பறக்குது கொடி!!

ஏழ்மையின் பிடியில் இருந்து
எனக்கும்  சுதந்திரம் இல்லை...
வறட்சியின் பிடியில் இருந்து
விவசாயத்துக்கும் சுதந்திரம்
இல்லை- ஊழல்
அரசியலின் பிடியில் இருந்து
அடித்தட்டு மக்களுக்கும்
சுதந்திரம் இல்லை....
சாதி கொடுமையில் இருந்து
சாதாரண மாந்தருக்கும்
சுதந்திரம் இல்லை.....

இருந்தாலும் எல்லாம் தீரும்
என்ற நம்பிக்கையுடனும்
ஒருவித
ஏக்க பார்வையுடனும்
ஒவ்வொரு வருடமும்
உதடுகள் ஏனோ உரைக்கிறது
"சுதந்திர தின வாழ்த்துக்கள்"
என்று...........
                  -கவிஅன்பு (13.08.2015)


No comments: