உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 24 August 2015

திரைப்படம் தயாரிக்கிறானோ கடவுள்?

சிறந்த  திரைப்படம் தயாரிக்க
சிந்தித்தான் கடவுள்...
திறம்பட அதை உருவாக்கிட
திட்டமிட்டு நோட்டமிட்டான்...
சுழலும் பூமிப்பந்தினை நோக்கி
கடவுளின் கண்களும் சுழன்றது..

வெள்ளைத்தாளில் கவிதைகள்
கிருக்கியபடி முகத்தில்
வெண்தாடியுடன் வயதான
இளைஞன் அகப்பட்டான்..
வரிகளுக்கு இவன்தான் என்று
வாலிப கவிஞர் வாலியினை
அழைத்து கொண்டான் கடவுள்..

திருப்தியான மனதுடன்
இமைகளை மூடாமல் இன்னும்
சிறிது தூரம் சுழன்றது
கடவுளின் கண்கள்...
கண்ணாடி அணிந்து
கை அசைவுகளை காட்டியபடி
மனித உறவுகளை படம்பிடித்து
மனதில் நிற்கும் காவியமாய்
உருவாக்கிய
மாபெரும் மனிதர் மாட்டினார்...
இயக்கத்திற்கு இவன்தான் என்று
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரை
தன் படத்திட்காய்
இணைத்துகொண்டான் கடவுள்...

ஆழ்மனதில் சந்தோசத்துடன்
ஆண்டவனின் தேடல்
மீண்டும் தொடங்கியது....
சற்று நகர்ந்தவனுக்கு  சிறிது
சஞ்சலம் கொடுத்தது  ஒரு இசை
அதுவே சந்தோசமும் கொடுத்தது..
எட்டிபார்த்தவனுக்கு ஏக மகிழ்ச்சி..
ஆர்மோனியம் கையில் வைத்து
ஆர்ப்பரிக்கும் இசை மீட்டிக்கொண்டு
அமைதியுடன் திகழும்  ஒருவன்
 அகப்பட்டான்...
மேன்மையான  இசைக்கு
இவனே மேல் என்று
மெல்லிசை மன்னர் எம்எஸ்வியை
மேலே  கூப்பிட்டு கொண்டான்
கடவுள்.....

கடவுளின் அடுத்த தேடல்
கதாநாயகன்...
இயக்கம்,வரி,இசையென
எல்லாவற்றிலும் திரையுலகை
தேர்வு செய்த கடவுளின் மனம்
நாயகனை  மட்டும்
உண்மையான நாயகனாய் - நிஜ
உலகில் வாழ்ந்த ஒருவனை
தேர்வு செய்ய விரும்பியது...
கிடைப்பானோ? திகைத்து கொண்டிருந்த
கடவுளுக்கு
திடீரென்று அதிர்ச்சி ....
அவன் பிடரியை உரசியபடி
பின்புறம் அக்னி ஜுவாலையுடன்
வானுலகை அதிர வைக்கும்
வாகனம் போல் சென்றது ஒன்று..
அதிர்ச்சியுடன் கூடிய பயம்
கடவுளின் கண்ணில்...

தன்னையே பயம் கொள்ள வைத்த
தன்னிகரில்லா வீரன் யாரென்று
தவித்த கடவுள்
தற்செயலாய் பார்த்தான் பூமியினை ..
அழகான சிரிப்புடன்..அம்சமான உடையுடன்
ஆரவாரமில்லாத ஒருவன்
அங்கே தென்பட்டான்..
"அடடா! இவனல்லவே உண்மையான
நாயகன்" இயம்பியது இறைவன் மனம்...
தன் தயாரிப்பின் நாயகன் தேர்வுக்கு
தகுதியானவான்  இவனென்று
அக்னி சிறகினை கொண்ட ஏவுகணை நாயகன்
தன்னிகரற்ற மனிதன் அப்துல்கலாமை
தன்னுடன்
சேர்த்து கொண்டான் கடவுள்..

அனுமதி கேட்காமல் அடுத்த கணமே
எடுத்து செல்லும் கடவுளுக்கு
அகங்காரம் அதிகம்தான்
"தயாரிப்புக்கு பொருத்தமானவர்கள்
கிடைத்து விட்டார்கள்" என்று
கடவுளின் இதயம்
சந்தோசத்தால் நிரம்பியது....

பிடித்தவர்களை இழந்து வாடும்
மனிதர்களின் கண்களோ
கண்ணீரால் நிரம்பியது..
அதையெல்லாம் துளியும்
கண்டு கொள்ளாமல் தன் தயாரிப்புக்காக
அடுத்த ஒருவனை தேடி சுழன்றது
கடவுளின் கண்கள்...
                       - கவிஅன்பு

No comments: