உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 13 August 2015

சுதந்திர தின கவிதை

தாய்ப்பால் வற்றியது என்று
கஷ்டப்பட்டு
வாங்கிய புட்டிபாலில்
கலப்படம்.......
பாலினை போன்ற
வெண்மையினை
கொடியில் பார்க்கிறேன்.....

தந்தையின் விவசாயம்
வானம் பார்த்த பூமி,
வறண்டு போன நீர்நிலை
வறட்சியின் பிடியில்
வளமின்றி போனது.....
பசுமை வண்ணம் பச்சையினை
கொடியில் பார்க்கிறேன்.....

உடுத்த உடையின்றி
வறுமையில்  வாழ்வு
ஆன்மிக ஆறுதல் தேடி
அன்னை தந்தை  வாங்கிய
காவி உடை கூட
கந்தலாகி போனது......
கசங்காத காவி வண்ணம்
கொடியில் பார்க்கிறேன்......

மனையில்  இருந்த
மாட்டு வண்டியும்
காணாமல் போய்
வாகனம்  வாங்க கூட
வசதியில்லை......
பழுதின்றி  சுழலும் சக்கரம்
பாரத கொடியில் பார்க்கிறேன்......

வறுமையால் மதுவினை
குடிக்கின்ற தந்தை
அடிக்கின்றார் அன்னையை...
அக்கம் பக்கம் பார்க்க
அவமானத்தில் தலைகுனிவு......
கர்வத்துடன் கொடி
நிமிர்ந்து பறப்பதை
கண்ணால் பார்க்கிறேன்.......

குடும்பத்தை வறுமை
பிடித்து  வாட்டுகிறது.....
ஆனாலும் என்
கைகளோ தேசிய கொடி
பிடித்து ஆட்டுகிறது......

பட்டொளி வீசுவது
கொடியில் மட்டும் அல்ல......
வளம் பெறுவோம் என்ற
நம்பிக்கை கொண்ட என்
கண்களிலும்தான்........
                 -கவிஅன்பு


No comments: