உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 25 January 2019

குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கடல் தாண்டி மீன் பிடிக்க
கட்டுடல் மீனவன் சென்றான்
படகு தொட்ட அலை கரை  வந்தது
பாவம் அவனை காணவில்லை ....
ஆட்சி மாறினாலும் அலை போல
தொடரும் மீனவனின் அவல நிலை !....

கா விரி பெயர் போல
காலமெல்லாம் விரிந்து கொண்டே
இருக்கும் காவிரி பிரச்னை
மூச்சடக்கி போராடினாலும் முழுதாய்
தீராத முல்லை பெரியார் பிரச்னை !

போரும் முடிந்தது பொழுதும் விடிந்தது
வீடிழந்து நிலமிழந்து இன்னும்
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்
அவல நிலை தொடர்கிறதே !
தொப்புள் கோடி தூர சொந்தம்
ஈழ தமிழர் பிரச்னை!

பாட்டனின் நிலப்பரப்பு தமிழ்
பரம்பரைக்கு சொந்தமில்லையாம்
கடல் எல்லையில் கால் வைத்தால்
கல்லால் அடிக்கிறான் சிங்களன்
எம்நிலத்தை எவரோ கொடுத்து போக
ஏங்கி நிற்கிறோம் மீட்க  வழியின்றி
கவனிப்பாரின்றி தொடரும்
கச்சத்தீவு பிரச்னை !

அறுசுவைக்கு ஆடு வெட்டுகிறான்
அதை தடுக்க ஆளை காணோம்...
மகிழ்ந்துண்ண மாடு வெட்டுகிறான்
மறுத்து பேச மனிதரை காணோம் ....
வீட்டிலொரு பிள்ளை போல வளர்த்து
வீர விளையாட்டுக்கு காளை வந்தால்
விரைந்து வந்து தடுக்கின்றனர்-எம்
தமிழ் பாரம்பரியத்தை கெடுக்கின்றனர்
பரம்பரை மீது விழுந்த வெட்டு
தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு !
சங்கடம் தரும் ஜல்லிக்கட்டு பிரச்சனை !....

பிள்ளை படிக்க பணம் இல்லை
பெற்றோரை பார்க்க மனம்  இல்லை
மனைவியின் கஷ்டம் புரியவில்லை
மானம் போவது கூட தெரியவில்லை
மதுக்கடையில் காசினை கொடுத்து
சாக்கடையில் கிடைக்கும் மனிதன் !
தெருவெல்லாம் முளைத்த மதுக்கடைகள்
மனிதனின்  வளர்ச்சிக்கு பெரும் தடைகள்
மனித நேயம் கெடுக்கும் மது பிரச்சனை !

தமிழனுக்கு தலைவலி
தண்ணியில்தான் போலும்
கடலில் மீனவன் காவிரியில் விவசாயி
மதுக்கடையில் பாமரன்
இன்னும் எத்தனையோ பிரச்சனை தீரவில்லை
எழுதி வைத்தாலும் மாறவில்லை
அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது
ஆனாலும் என்ன மாற்றம்தான் தந்தது
அரசியல்வாதிகள்தான் மாறி விட்டனர்
ஊழலில் திளைப்பதிலும் பணத்தால்
சட்டத்தை வளைப்பதிலும் தேறிவிட்டனர்!
தமிழன் என்ற முறையில் மனமெல்லாம்
வருத்தம் மலை போல் இருந்தாலும்
இந்தியன் என்ற முறையில்
சொல்லிவைக்கிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் என்று !
 -கவிஅன்பு



No comments: