உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 10 September 2016

காய்ந்து போவது காவிரி ஆறு மட்டுமல்ல...

காதலிக்காக  ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக  ஒன்றும்
எழுதவில்லையே !

"காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்.”
பாரதி சொன்னான்...- இன்று
காவிரி வெற்றிடமாய் மாறி விட்டதே..
"வண்ணம் பாடியே நடக்கும் காவிரி"
பாரதிதாசன் சொன்னான் - இன்று
வளமின்றி  காவிரி
வறுமையுடலுடன் படுத்துவிட்டதே.....

கருகும் பயிருக்காய்
கண்ணீர் வடிக்கும் விவசாயினை
கண்டுணர மனமில்லை.....
கபாலி பட நான்கு காட்சிகளை
கண்டு அலைகிறானே தமிழன் !...

காய்ந்து போன நிலத்தை எண்ணியெண்ணி
ஓய்ந்து போகிறான் நம் விவசாயி - நடிக
கட் அவுட்டுக்கு பாலூற்ற கூடும் கூட்டம் கூட
கடைமடை விவசாயிக்கு வருவதில்லையே.....

வேற்றுமொழி  பேசும் மாநில ஒற்றுமை - அமுது
 ஊற்றாய் இனிக்கும் தமிழ் பேசும்
நம் தமிழனிடம் இல்லையே  !...
திராவிடம் பேசி மெல்ல பிரிப்பதும்
தமிழக அரசியலின் ஒரு தொல்லையே !!

அறவழியோ ஆக்ரோசமோ போராட்டமெனில்
அரசியல்வாதியும்  அடித்தட்டு மக்களும்
ஒன்றாய்  சேர்வது அண்டை மாநிலம்......
சாதியிலும் மதத்தாலும் கட்சியாலும்
அடித்து கொண்டு பிரிந்து போவது
நம் அழகு தமிழ்மாநிலம்.......

எத்தனை கோடி தமிழ் மக்கள்
எங்கெங்கோ  இருந்தென்ன பயன்? -
ஒற்றுமை இன்றி
ஈழத்தின்  நிலத்தை விட்டோம் -கச்சத்தீவை
கயவருக்கு கொடுத்தோம் அன்று.......
காவிரி, முல்லை , பாலாறு கூட
கரம்நழுவி செல்லும் நிலையில் இன்று ...

சரித்திரத்தில் பெற்ற பெருமை  - தமிழ்
சந்ததி வாழும் வரை தழைக்க வேண்டும்   ..
இதற்கு நல்லொற்றுமை தமிழருக்குள்
நிலைக்கவேண்டும் - இல்லையெனில்
வற்றிகாய்ந்து போவது காவிரிஆறுகள் மட்டுமல்ல
தமிழினத்தின் வளர்ச்சி பெருமையும்தான்......
                                       - கவிஞர் கவிஅன்பு

காவிரி பிரச்சனை - கவிதை

அடித்து தாக்கப்பட்ட
நான்கு சக்கர வாகனங்கள்....
கண்ணாடியோடு  சேர்ந்து
நொறுங்கி விழுந்து
கொண்டிருந்தது
இந்திய இறையாண்மை......