உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 August 2016

குழந்தை தொழிலாளர் கவிதை

மண்ணில் ஓடியாடி மழலையோடு
மனமகிழ விளையாடும் பருவத்தில்
மண்ணைக் கொத்தி பணிசெய்யும்
மாறுபட்ட நிலையினை பாரீர் !.....
மண்ணை மட்டுமல்ல சிறுவன்  நம்
மனதையும் கொத்தி செல்கிறான்.....

பள்ளிசென்று பாடம்கற்று-புத்தகமதை
கரங்களில் ஏந்தும் பருவத்தில்
கனமான செங்கற்களை கையிலேந்தும்
கடினமான நிலையினை பாரீர் !.....
செங்கற்களை மட்டுமல்ல அவன்-சீழ்பிடித்த
சமுதாய நிலையினையும் ஏந்தி செல்கிறான்...

மெலிந்த உடலுடன் - அருவியாய்
வழிந்த வியர்வை பரவ
மலராத மொட்டொன்று இங்கே
மரக்கட்டை சுமந்து திரியும்
மனம்நோகும்  நிலையினை பாரீர் !....
மரக்கட்டையை மட்டுமல்ல சிறுவன்-வறண்ட
குடும்ப வறுமையினையும் சுமந்து திரிகிறான்

தோளில் தகப்பன் தூக்கிவைத்து
துள்ளும் மகிழ்வுடன் திரியும் வயதில்
தோளே சுமைதாங்கியாய் மாறிவிட்ட
துயரமான நிலையினை பாரீர் !....
தோள்சுமையை மட்டுமல்ல சிறுவன்-தேசத்தின்
அவலத்தையும் சேர்த்தே சுமக்கிறான்......

குழந்தை வேலை செய்யும் இக்குற்றத்திற்கு
பெற்றோரும் ஒரு காரணம்
பெருஞ்செல்வந்தனும் ஒரு காரணம்
சமுதாயமும் ஒரு காரணம்..
சாக்கடை அரசியலும் ஒரு காரணம்...

முதலாளிகள் மாறுகையில் இக்குழந்தைகளின்
முகவரிகள் மாறுவது எப்போது?
அரசியல்வாதி மாறுகையில் இக்குழந்தைகளின்
அவலநிலை மாறுவது எப்போது?

"இனியொரு விதி செய்வோம்" என்றான் பாரதி ....
விதிகள் எங்கே செய்வது ?- சிறார் சட்டத்துக்கு
எதிரே சதிகள்தான் இங்கே செய்கின்றனர் ...
சிறு தளிர்கள் தளர்ந்து போகாமல் -ஒருநாள்
தளிர்த்து வளரும் நிலையது பெறும் !
அன்றுதான் இச்சிறுவர்
மனதில் மகிழ்ச்சி அலையது வரும் !!
                            - கவிஅன்பு

சுதந்திர தின கவிதை

நான்கடுக்கு பாதுகாப்பின்
நடுவில் ஏற்றப்படும்
தேசிய கொடி ...

காணாமல் போன
காந்தியும் சுபாஷும்
கொடிக்கம்பம் அருகில்
புகைப்படமாய்....

மிட்டாய் போயி லட்டு
வந்தது - அழுக்கு ஆடையுடன்
பெற்று கொண்ட சிறுமி...

சாலைவிதி மீறிய பயணம்..
இடைமறித்த காவலர்..
கையூட்டு பெற்று
கண்டும் காணாமல் போயினர்...

நாளிதழை பார்த்தால்
கற்பழிப்பு  செய்தி..
சமாதான புறாக்கள்
சத்தமின்றி இருக்கின்றன...

விழிப்புடன் எல்லைகாக்கும்
ராணுவ வீரர்கள்..
பாராளுமன்றத்தில்
தூங்கிவழியும் அரசியல்வாதிகள்...

சுதந்திரம் பெற்றது நள்ளிரவில்
அதனால்தான் என்னவோ
முழுமையான விடியல் நோக்கி
பயணம் இன்னமும் தொடர்கிறது...
சுதந்திர தின வாழ்த்துகள்
                           - கவிஅன்பு (15.08.2016)


கவிஞர் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை

போகாதே போகாதே என்றெழுதிவிட்டு
போய்விட்டாயே இன்று எம்மைவிட்டு !
கனவுகள் பூக்குமென்று  பாடிவிட்டு-இன்று
கணத்தில் உதிர்ந்து விட்டாயே !

முதல்மழை நனைக்கும் என்றாய்
இறப்பு உன்னை அணைக்கும் என்று
எண்ணவில்லை நாங்கள்....
கல்லறையில் கூட ஜன்னல்வைத்து
பார்ப்பேன் என்றாயே ! இன்று
கல்லறையில் வாசம் செய்ய
எம்மை விட்டு சென்றாயே !!

வானம் மெல்ல வந்திறங்கும் என்று
சொல்லிவிட்டு
வானம் நோக்கி நீ சென்று விட்டாயே !
காற்றை கொஞ்சம் நிற்க சொன்னாய்
கருத்திலேற்றி மகிழ்வில் ஆடினோம்  ! இன்றுன்
மூச்சு காற்று  அல்லவா நின்றுவிட்டது !!
கண்களில் சோகமேறி மனதால் வாடினோம் !!

உறவுகளின் நேசத்தை எழுத்தில்
உணர்ந்து சொல்லும் உனைபோல
உன்னத கவிஞனை இழந்து
துக்கமடைகிறோம் !....
அசுரகல் பட்டு தெறிக்கும் கண்ணாடிபோல்
மனதால் உடைகிறோம் !! ..
முத்துக்குமார் என்று நாங்கள் மட்டுமல்ல
மூன்றாவது தேசியவிருதும் கூட இனி
உனை தேடி அலையும்...

கடல் சிப்பிக்குள் முத்து இருக்கும் -தமிழ்
கவிதை சிந்தனைக்குள் முத்துக்குமார்
நீ என்றும் இருப்பாய்...
இப்படிக்கு
ஈடு இணையற்ற உன் இறப்பால்
இதயம் நொறுங்கிய ஒரு ரசிகன் ..
                                 - கவிஅன்பு (14.8.2015)