உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday, 31 May 2015

உலக புகையிலை எதிர்ப்பு தின கவிதை - எமதூதனின் கடிதம்

உற்ற நண்பர்களுக்கு கூட
உரிய நேரம் கொடுக்காமல்
எனக்காக நீ
எடுத்துக்கொண்ட நேரம்
அதிகம்...

செல்ல காதலியின்
செவ்விதழ் கன்னத்தை  விட
உன்னிதழ்கள்
என்னை முத்தமிட்ட
தருணங்கள்தான்
அதிகம்....

அழகு குழந்தையை
கைகளில் அள்ளி
அன்போடு  கொஞ்சியதை விட
என்னை கொஞ்சிய நேரம்தான்
அதிகம்....

வயதான தாய்தந்தையை
வளர்ந்த பின் தேடாமல்
என்னை நீ அலைந்து
தேடிய நேரமே அதிகம்....

செம்மையான குடும்பத்திற்கு
சேர்த்து வைக்காமல் எனக்காய்
செலவழித்த பணமும் கூட
அதிகம்...

எமதூதன் என்று தெரிந்தும்
ஆழமாய் என்னை
நேசிக்கிறாய்...
விட்டு பிரிந்து செல்ல
அதிகமாய்  நீ
யோசிக்கிறாய்..

என்னையே தேடி வரும்
உனக்காக நிஜமாய்  என்னை
கொடுப்பேன் -ஒருநாள்
எமனுக்காக உன் உயிரையும்
எடுப்பேன் ..
-இப்படிக்கு புகையிலை-
                       - கவிஅன்பு (31.05.2015)