Tuesday, 21 November 2017

மனைவியின் மன உணர்வு - கவிதை

மது குடி
மனம் வருந்துவேன்...
ஆனாலும்
மனதால் உன்னை
ஏற்று கொள்வேன் !...

புகை பிடி ..
பிடிக்கவில்லை
எனக்கு என்றாலும்
புன்னகை ஏந்தி உன்னை
ஏற்று கொள்வேன் !..

உடல் காயம்
தோன்ற அடி.
வலித்தாலும்
மணித்துளிகளில் மறந்து
மார்போடு உன்னை
சேர்த்து கொள்வேன்  !

உள்ளம் வலிக்க
உதடுகளால்  வசை பாடு..
உரிமை உனக்கு உண்டென்று
ஊமையாகி போனாலும்
உயிராய் உன்னை நேசிப்பேன் !

ஊதாரியாக இரு..
உள்ளம் கலங்கும்..ஆனாலும்
உவகையுடன்
உன்னை உபசரிப்பேன் !..

நேரம் கடந்து வீட்டிற்கு வா..
நெருடல் மனதில் வரும்-எனினும்
நெஞ்சார உன்னை
அணைத்து விடுவேன்  !...

வேலை வேலை
என்று என்னை மறந்து விடு....
நெஞ்சு தவிக்கும் ஆனாலும்
நேசம் உன்னிடம் காட்டுவேன்  !...

வீட்டில் உதவிகள் செய்யாதெ...
விரக்தி தோன்றும் ஆனாலும்
விரல்களால் உன்  கரம் கோர்ப்பேன் !..

என்னதான் நீ
எப்படித்தான் இருந்தாலும்
கணவன் என்று உன்னை என்
கண்ணிமையில்  வைத்து கொள்வேனடா
இதோ ஒன்றை தவிர...

மனைவி நான் என்பதை மறந்து
மாற்று பெண்ணிடம் காதல் கொண்டால்
மணவாளன் உன்னை விரும்புவதை விடுத்து
மரணத்தையே முழுதாய்
என் மனமும் விரும்புமடா..
மறுபடி உன் மீது
காதல் எப்படி அரும்புமடா.....
கட்டிய என் கணவனே!
             -கவிஅன்பு,உச்சிநத்தம்

Related image

1 comment: